வியாழன், 5 மே, 2011

தஞ்சை மாவட்டத்தில் பள்ளி செல்லாத குழந்தைகள் 2,278

தஞ்சாவூர்:

      தஞ்சாவூர் மாவட்டத்தில் நிகழாண்டில் இதுவரை 2,278 குழந்தைகள் பள்ளிக்குச் செல்லாத குழந்தைகளாகக் கண்டறியப்பட்டுள்ளனர் என்றார் அனைவருக்கும் கல்வி இயக்க உதவித் திட்ட அலுவலர் வி. கோபாலகிருஷ்ணன்.

 இதுகுறித்து அனைவருக்கும் கல்வி இயக்க உதவித் திட்ட அலுவலர் வி. கோபாலகிருஷ்ணன் மேலும் கூறியது:  

               அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் தஞ்சாவூர் மாவட்டத்தில் பள்ளிக்குச் செல்லாத குழந்தைகளை கண்டறிவதற்காக ஆசிரியர் பயிற்றுநர்கள் ஒவ்வொரு குடியிருப்புப் பகுதிகளுக்கும் சென்று ஆய்வு செய்து வருகின்றனர்.  இந்த ஆய்வில் பள்ளியில் சேராத குழந்தைகள், பள்ளிக்குச் சென்று இடையில் நின்ற குழந்தைகள், பள்ளிக்கு போகாத குழந்தைகள் என மூன்று வகையில் கணக்கெடுக்கப்படுகிறது. 

                 மாவட்டத்தில் 16 சிறப்புப் பயிற்சி மையங்களில் 6, 7, 8 ஆம் வகுப்பு மாணவ, மாணவிகள் 342 பேரும், 135 இணைப்பு மையங்களில் 2,178 மாணவர்கள் 1 முதல் 8 வகுப்பு வரை படித்து வருகின்றனர். மேலஉளூர், பூதலூர், கீழத் திருவிழாப்பட்டியில் நரிக்குற குழந்தைகள் படிக்க பிரத்யேகமாக உண்டு உறைவிட மையம் அமைக்கப்பட்டுள்ளது. தவிர இதே போல் 5 உண்டு உறைவிட மையங்களில் 345 குழந்தைகள் படிக்கின்றனர்.  இத் திட்டத்தில் சேரும் மாணவர்களுக்கு பாடப்புத்தகம், பை, காலணி, எழுது பொருள்கள் மற்றும் சீருடை வழங்கப்படுகிறது. உண்டு உறைவிட மையங்களில் 3 வேளைக்கு உணவும், பிற மையங்களில் படிக்கும் மாணவர்களுக்கு மதிய உணவும் வழங்கப்படுகிறது. 

               கடந்த ஆண்டில் சேர்க்கப்பட்ட மாணவர்கள் மார்ச் மாதத்துடன் படிப்பை முடித்துள்ளனர். அவர்கள் வயதுக்கேற்ற வகுப்பில் சேர்க்கப்படுவர்.  நிகழாண்டு இத் திட்டத்தில் 2,345 மாணவர்கள் கண்டறிந்து சேர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் 394 குடியிருப்புகளில் ஆய்வு நடத்தப்பட்டு பள்ளிச் செல்லா குழந்தைகள் கணக்கெடுக்கப்பட்டன. வெளிமாநிலம் அல்லது மாவட்டத்தைச் சேர்ந்தவர்களில் பள்ளிச் செல்லா குழந்தைகள் இருந்தாலும் அவர்களும் கண்டறிந்து படிக்க அனுப்பி வருகிறோம். மாற்று மொழி பேசுபவராக இருந்தால் அந்த மொழி தெரிந்தவர்களை கொண்டு பாடம் கற்பிக்கப்படுகிறது. 

              மாவட்டத்தில் நிகழாண்டு இதுவரை 1,412 ஆண்கள், 866 பெண்கள் என மொத்தம் 2,278 மாணவர்கள் கண்டறியப்பட்டுள்ளனர். நிகழாண்டில் கூடுதலாக உண்டு உறைவிடப்பள்ளி, சிறப்பு முகாம்கள், இணைப்பு முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளன.  தொண்டு நிறுவனங்கள், கிராமங்களிலுள்ள இளைஞர் அமைப்பு களின் உதவியோடு பள்ளிச்செல்லா குழந்தைகள் கண்டறியப்படுகின்றன. இக் கணக்கெடுப்பின் போது மாற்றுத் திறனாளிகளின் கணக்கெடுப்பும் நடத்தப்படுகிறது. மாவட்டத்தில் ஒன்றியத்திலுள்ள வட்டார வளர்ச்சி மையங்களில் பகல் நேர பாதுகாப்பு மையம் இயங்குகிறது. 

              இங்குள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு உணவு மற்றும் உடல் நலம் பேணுவதற்கான உபகரணங்கள் வழங்கப்படுகின்றன. அவர்களை அழைத்து வரும் பெற்றோருக்கு போக்குவரத்துச் செலவுத் தொகை வழங்கப்படுகிறது. 6 முதல் 14 வரையுள்ளவர்களுக்கு கல்வி அளிப்பது சமுதாயம் மற்றும் ஆசிரியரின் கடமை என்று கல்வி அறிவுச் சட்டம் கூறுகிறது.  மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களாக ஆனந்தடேவிட், அசோக் ஆகியோர் செயல்படுகின்றனர் என்றார் கோபால கிருஷ்ணன்.

0 கருத்துகள்:

Google Indic Transliterate

  © Blogger templates ProBlogger Template by Ourblogtemplates.com 2008 | The Blog Full of Games

Back to TOP