செவ்வாய், 3 மே, 2011

கால்நடை மருத்துவப் படிப்பு விண்ணப்பங்கள் விநியோகம்


சென்னையில் உள்ள தமிழ்நாடு கால்நடை மருத்துவக் கல்லூரியில் கால்நடை இளங்கலை படிப்புக்கான விண்ணப்ப விநியோகம் திங்கள்கிழமை தொடங்கின.
 
              தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் இளநிலை கால்நடை மருத்துவம் உள்ளிட்ட படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் விநியோகம் திங்கள்கிழமை தொடங்கியது.  

                 தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் தேர்வுக் குழு தலைவர் டாக்டர் எஸ்.திலகர் விண்ணப்பங்கள் விநியோகத்தை தொடங்கி வைத்தார்.  சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் இளநிலை கால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை பராமரிப்பு பட்டப்படிப்பு, தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் இளநிலை மீன்வள பட்டப்படிப்பு, சென்னை கொடுவள்ளி உணவு மற்றும் பால் தொழில்நுட்ப நிலையத்தில் உள்ள உணவு பதனிடும் தொழில்நுட்பம், கோழியின உற்பத்தித் தொழில்நுட்பம் ஆகிய படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படுகின்றன. 

 வயது வரம்பு: 

              இந்தப் படிப்புகளில் சேர ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின வகுப்பினர்களுக்கு வயது வரம்பு இல்லை. இதர வகுப்பினருக்கு 01-07-2011 அன்று 21 வயதுக்குள் இருக்க வேண்டும். வயது வரம்பு எந்தக் காரணத்தைக் கொண்டும் தளர்த்தப்பட மாட்டாது.  

கட்டணம்: 

             விண்ணப்பங்களுக்கான கட்டணம் ரூ. 600 ஆகும். ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின வகுப்பினர்களுக்கான விண்ணப்பக் கட்டணம் ரூ. 300 ஆகும்.  விண்ணப்பங்கள் ஜூன் 6-ம் தேதி வரை விநியோகிக்கப்படும். விண்ணப்பத்துக்கான கட்டணத்தை THE FINANCE OFFICER, TANUVAS, CHENNAI-51 என்ற பெயரில் வங்கி வரைவோலையாக செலுத்த வேண்டும். 

 பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 

தலைவர், 
தேர்வுக்குழு (இளநிலை பட்டப்படிப்பு) 
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம், 
 மாதவரம் பால்பண்ணை, 
சென்னை-51 

            என்ற முகவரிக்கு சென்று சேருமாறு அனுப்ப வேண்டும்.  பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சாதாரண தபாலில் மட்டுமே அனுப்ப வேண்டும்.  

மேற்கூறப்பட்ட படிப்புகளில் சேருவதற்கான கலந்தாய்வு ஜூலை 13, 14, 15 ஆகிய தேதிகளில் நடைபெறும் என தேர்வுக் குழு தலைவர் டாக்டர் எஸ்.திலகர் தெரிவித்தார்.  

மேலும் விவரங்களுக்கு:  



Read more...

பார்வையற்ற மாணவர்களுக்கான பி.எட். ஒலி பாடப் புத்தகங்கள்




பார்வையற்ற மாணவர்களுக்கான பி.எட். ஒலி பாடப் புத்தகங்களை நீதிபதி மதிவாணன் வெளியிட, மாணவர் ரமேஷ் பெற்றுக் கொண்டார். உடன் நேத்ரோதயா நிறுவனர் கோவிந்தகிருஷ்ணன்
 
             பார்வையற்ற மாணவர்கள் கேட்டு படிக்கும் வகையில் உருவாக்கப்பட்ட பி.எட். ஒலி (ஆடியோ) பாடப்புத்தகங்கள் வெளியீட்டு விழா சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 
 
               நேத்ரோதயா தன்னார்வத் தொண்டு நிறுவனம் சார்பில் நடந்த இந்த விழாவில், ஒலி புத்தகங்களை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி மதிவாணன் வெளியிட, பார்வையற்ற மாணவர் ரமேஷ் பெற்றுக் கொண்டார். 
 
 விழாவில் நேத்ரோதயா நிறுவனர் கோவிந்தகிருஷ்ணன் பேசியது: 
           
                பி.எட். படிக்கும் பார்வையற்ற மாணவர்கள் பயன்பெறும் வகையில் ஒலி பாடப்புத்தகங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. மாணவர்கள் தங்கிப் படிக்க சமுதாயக் கூடமும் துவங்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு முழுக்க,முழுக்க இலவசமாக இவை அளிக்கப்படுகின்றன.  மாணவர்கள் பயன்பெறும் வகையில் எங்கள் மையத்தில் கணினி மையம்,ஒலி நூலகம், சிவில் சர்வீஸ் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. 
 
           தமிழகம் முழுவதும் உள்ள அனைத்துப் பார்வையற்ற மாற்றுத்திறனாளி மாணவர்களும் இந்த வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ளலாம்.  ஞாயிற்றுக்கிழமை நடந்த நிகழ்ச்சியில் தமிழகம் முழுவதும் இருந்து வந்திருந்த 150 பார்வையற்ற மாணவர்களுக்கு இலவச பி.எட். ஒலி புத்தகங்கள் வழங்கப்பட்டன என்றார்.  பிர்லா குழுமம் சங்கர் நாராயணன், கமோடர் (ஓய்வு) வாசன், பின்னணி பாடகி சைந்தவி உள்ளிட்டோர் விழாவில் கலந்து கொண்டனர்.  
 
மேலும் விவரங்களுக்கு: 
 
நேத்ரோதயா, 
47/1, பிரிவு-2, 
நொளம்பூர், 
முகப்பேர் மேற்கு,
சென்னை - 600 037. 
044-2653 3680/2653 0712, 93828 96636
 
 
 என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.

Read more...

ஜூன் 26-ல் பார் கவுன்சில் தகுதித் தேர்வு

               அகில இந்திய பார் கவுன்சில் தகுதித் தேர்வு (Certificate of practice) ஜூன் 26-ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  சட்டப்படிப்பு (பி.எல்.) முடித்தவர்கள் வழக்கறிஞராகப் பதிவு செய்ய பார் கவுன்சிலில் பதிவு செய்வதோடு பார் கவுன்சில் நடத்தும் தகுதித் தேர்வு எழுதி தேர்ச்சி பெற வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது.  

              இதையடுத்து கடந்த மார்ச் 6-ம் தேதி பார் கவுன்சில் தகுதித் தேர்வு நடந்தது. ஆனால் இந்தத் தேர்வுக்கு பலர் எதிர்ப்புத் தெரிவித்தனர். ஆர்ப்பாட்டம், போராட்டங்கள் நடைபெற்றன. பலர் இந்தத் தகுதித் தேர்வில் பங்கேற்கவில்லை.  இந் நிலையில் ஜூன் 26-ம் தேதி பார் கவுன்சில் தகுதித் தேர்வு நடத்தப்படும் என்று அகில இந்திய பார் கவுன்சில் அறிவித்துள்ளது. இது தொடர்பாக அகில இந்திய பார் கவுன்சில் தலைவர் கோபால் சுப்பிரமணியன் தமிழ்நாடு பார் கவுன்சில் செயலர் தட்ணாமூர்த்திக்கு இது தொடர்பாக கடிதம் எழுதி உள்ளார்.  இதில் ஜூன் 26-ம் தேதி தகுதித் தேர்வு நடைபெறும். மார்ச் 6-ம் தேதி எழுதாதவர்கள், புதியவர்கள் இப்போது தேர்வு எழுதலாம். ஏப்ரல் 25 முதல் மே 24 வரை விண்ணப்பங்களைப் பதிவு செய்யலாம். விண்ணப்பங்கள் மாநில பார் கவுன்சில் அலுவலகத்தில் கிடைக்கும். மேலும் இணைய தளத்திலும் விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று கூறியுள்ளார்.

Read more...

சமச்சீர் கல்வி புத்தகங்களின் விலை

              பத்தாம் வகுப்புவரையிலான சமச்சீர் புத்தகங்களின் விலை தொடர்பாக செவ்வாய்க்கிழமை அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

                பத்தாம் வகுப்பு வரை சமச்சீர் கல்வி முறை இந்தக் கல்வியாண்டு (2011-12) முதல் அறிமுகமாகிறது (கடந்த ஆண்டு 1, 6 ஆகிய வகுப்புகளில் சமச்சீர் கல்வி முறை அறிமுகம் செய்யப்பட்டது).  இதற்காக, தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் சார்பில் 7.65 கோடி புத்தகங்கள் அச்சிடப்பட்டு வருகின்றன. ஆனால், இந்தப் புத்தகளுக்கான விலை இதுவரை நிர்ணயிக்கப்படவில்லை.  சமச்சீர் கல்வி புத்தகங்களின் விலை நிர்ணயம் தொடர்பான பரிந்துரை அரசின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது. விலை தொடர்பான அறிவிப்பு பெரும்பாலும் செவ்வாய்க்கிழமை வந்துவிடும். 

               அதன்பிறகு, மெட்ரிகுலேஷன் பள்ளிகளுக்கு ஆங்கில வழி சமச்சீர் புத்தகங்கள் அனுப்பும் பணிகள் தொடங்கும் என்று கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.  கடந்த ஆண்டு வெளிவந்த ஒன்றாம் வகுப்பு புத்தகம் ஒன்றின் விலை ரூ.60 எனவும், 4 புத்தகங்கள் அடங்கிய செட் ரூ.200 எனவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டது. 6-ம் வகுப்பு புத்தகம் ஒன்றின் விலை ரூ.65 எனவும் 5 புத்தகங்கள் அடங்கிய செட் ரூ.300 எனவும் நிர்ணயிக்கப்பட்டிருந்தது.  இந்த முறை 5-ம் வகுப்பு வரை புத்தக செட்டின் விலை ரூ.200-ஐ ஒட்டி விற்கப்படலாம் எனத் தெரிகிறது. 7-ம் வகுப்பு புத்தகங்கள் அடங்கிய செட்டின் விலை ரூ.300 என நிர்ணயம் செய்யப்படலாம்.  8,9,10 ஆகிய வகுப்புகளுக்கு புத்தகம் ஒன்றின் விலை ரூ.70 வரை நிர்ணயிக்கப்படலாம் எனத் தெரிகிறது. 

  5 கோடி புத்தகங்கள் தயார்: 

               தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் சார்பில் இதுவரை சுமார் 5 கோடி புத்தகங்கள் வரை அச்சிடப்பட்டுள்ளன. இதில் 3.5 கோடி புத்தகங்கள் மாநிலம் முழுவதும் உள்ள கல்வி மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.  அரசின் அனுமதி கிடைத்ததும் புத்தகங்கள் உடனடியாக பள்ளிக்கு அனுப்பி வைக்கப்படும் என்று கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். 

 காகிதப் பிரச்னை: 

               தமிழ்நாடு காகித ஆலை நிறுவனம் ஏற்கெனவே ஒப்புக்கொண்டவாறு காகிதத்தை வழங்காததால், பாடப்புத்தகங்களை அச்சிடுவதில் சிக்கல் எழுந்துள்ளதாகத் தெரிகிறது.  பாடப்புத்தகம் அச்சிடுவதற்காக 24 டன் காகிதத்தை அந்த நிறுவனம் வழங்கியிருக்க வேண்டும். ஆனால், இதுவரை சுமார் 20 டன் காகிதம் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 4 டன் காகிதத்தையும் வழங்குமாறு பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் காகித ஆலை நிறுவனத்தை வலியுறுத்தி வருகின்றனர்.  புத்தகத்தை அச்சிடுவதற்கு 35 நாள் அவகாசம் மட்டுமே வழங்கியுள்ள நிலையில், காகிதத்தை அளிப்பதற்காக மட்டுமே 25 நாள்களை எடுத்துக்கொண்டதாக அதிகாரிகள் புகார் தெரிவிக்கின்றனர். 

Read more...

Google Indic Transliterate

  © Blogger templates ProBlogger Template by Ourblogtemplates.com 2008 | The Blog Full of Games

Back to TOP