புதன், 18 மே, 2011

செவிலியர் படிப்பில் சேர இன்றுமுதல் விண்ணப்பம்

            தமிழகத்தில் பி.எஸ்ஸி. (நர்சிங்), பி.ஃபார்ம் (மருந்தியல்), பி.பி.டி. (பிஸியோதெரப்பி), பி.ஏ.எஸ்.எல்.பி. (காது மருத்துவம் தொடர்புடைய கேட்பியல்-பேச்சியல் படிப்பு) ஆகியவற்றில் மாணவர்களைச் சேர்க்க புதன்கிழமை (மே 18) முதல் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படுகின்றன. 

                சென்னை அரசு மருத்துவக் கல்லூரி உள்பட தமிழகத்தில் பல இடங்களில் உள்ள 17 அரசு மருத்துவக் கல்லூரிகளில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை விண்ணப்பங்களைப் பெறலாம். விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து ஜூன் 2-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று மருத்துவக் கல்வி தேர்வுக் குழுச் செயலர் டாக்டர் ஷீலா கிரேஸ் ஜீவமணி தெரிவித்தார்.  

எத்தனை இடங்கள்? 

             சென்னை அரசு மருத்துவக் கல்லூரி, மதுரை அரசு மருத்துவக் கல்லூரி, செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி ஆகியவற்றில் மொத்தம் 175 பி.எஸ்ஸி. (நர்சிங்) இடங்கள் உள்ளன. தமிழகம் முழுவதும் உள்ள சுயநிதி செவிலியர் கல்லூரிகளில் 5,000-த்துக்கும் மேற்பட்ட அரசு ஒதுக்கீட்டு பி.எஸ்ஸி. (நர்சிங்) இடங்கள் உள்ளன; அரசு ஒதுக்கீட்டு பி.எஸ்ஸி. (நர்சிங்) இடத்துக்கு ஆண்டுக் கட்டணம் ரூ.30,000.  சென்னை அரசு மருத்துவக் கல்லூரி, மதுரை அரசு மருத்துவக் கல்லூரி ஆகியவற்றில் மொத்தம் 110 பி.ஃபார்ம். படிப்பு இடங்கள் உள்ளன. இது தவிர சுயநிதி கல்லூரிகளில் 700-க்கும் மேற்பட்ட அரசு ஒதுக்கீட்டு பி.ஃபார்ம். இடங்கள் உள்ளன. 

                 சென்னை கே.கே.நகர் அரசு மறுவாழ்வு மருத்துவ மையம், திருச்சி கி.ஆ.பெ. விசுவநாதம் அரசு மருத்துவக் கல்லூரி ஆகியவற்றில் மொத்தம் 50 பி.பி.டி. (பிஸியோதெரப்பி) இடங்கள் உள்ளன. சுயநிதி கல்லூரிகளிலும் 700-க்கும் மேற்பட்ட அரசு ஒதுக்கீட்டு பி.பி.டி. இடங்கள் உள்ளன.  பி.ஏ.எஸ்.எல்.பி. படிப்பு: காது மருத்துவம் தொடர்புடைய பி.ஏ.எஸ்.எல்.பி. ("பாச்சுலர் ஆஃப் ஸ்பீச் லேங்குவேஜ் பதாலஜி') படிப்பு, கடந்த ஆண்டு சென்னை அரசு மருத்துவக் கல்லூரியில் 25 இடங்களுடன் தொடங்கப்பட்டது. இந்த ஆண்டும் 25 இடங்களுக்கு மாணவர் சேர்க்கை நடைபெறும்.

       இந்த பட்டப்படிப்பில் சேர, பிளஸ் 2 பாடத் திட்டத்தில் உயிரியல் பாடத்தைப் படிக்காமல் கணிதம்-இயற்பியல்-வேதியியல்-கம்ப்யூட்டர் அறிவியல் பாடங்களைப் படித்த மாணவர்களும் விண்ணப்பிக்கலாம். 

 ஜூலையில் தரவரிசைப் பட்டியல்: 

                மேலே குறிப்பிட்ட பி.எஸ்ஸி. (நர்சிங்) உள்ளிட்ட மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு வரும் ஜூலையில் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டு கலந்தாய்வு நடத்தப்படும் என்றார் மருத்துவக் கல்வி தேர்வுக் குழுச் செயலர் டாக்டர் ஷீலா கிரேஸ் ஜீவமணி

Read more...

இரண்டு நாள்களில் எம்.பி.பி.எஸ். சேர12,772 மாணவர்கள் விண்ணப்பம்

             எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். படிப்பில் சேர கடந்த இரண்டு நாள்களில் மொத்தம் 12,772 மாணவர்கள் விண்ணப்பத்தைப் பெற்றுள்ளனர். 

             கடந்த ஆண்டைப் போன்றே இந்த ஆண்டும் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர விரும்பும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டைக் காட்டிலும் ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் விண்ணப்பத்தை வாங்கி வருகின்றனர்.  சென்னை அரசு மருத்துவக் கல்லூரி உள்பட 17 அரசு மருத்துவக் கல்லூரிகள், சென்னை பாரிமுனையில் உள்ள அரசு பல் மருத்துவக் கல்லூரி ஆகியவற்றில் எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். படிப்பில் சேர திங்கள்கிழமை (மே 16) முதல் தொடர்ந்து விண்ணப்பம் வழங்கப்பட்டு வருகிறது. 

           சனி, ஞாயிறு விடுமுறை நாள்களிலும் விண்ணப்பம் வழங்கப்படும்.  முதல் நாளான திங்கள்கிழமை (மே 16) மொத்தம் 9,000 பேர் விண்ணப்பத்தைப் பெற்றனர். இரண்டாம் நளான செவ்வாய்க்கிழமை (மே 17) மொத்தம் 3,772 மாணவர்கள் விண்ணப்பத்தைப் பெற்றனர். விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து ஜூன் 2-ம் தேதி மாலை 5 மணிக்குள் அளிக்க வேண்டும். வரும் ஜூன் 21-ம் தேதி தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டு, முதல் கட்ட கலந்தாய்வு வரும் ஜூன் 30-ம் தேதி சென்னையில் தொடங்குகிறது.

Read more...

எம்.பி.பி.எஸ். படிப்பிலிருந்து விலகினால் ரூ.5 லட்சம் அபராதம்

               எம்.பி.பி.எஸ். அல்லது பி.டி.எஸ். படிப்பிலிருந்து ஒரு மாணவர் விலகும் நிலையில் செலுத்த வேண்டிய அபராதத் தொகை ரூ.2 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.  

               அதிக கட்-ஆஃப் மதிப்பெண் எடுத்து எம்.பி.பி.எஸ். அல்லது பி.டி.எஸ். படிப்பில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. அதிக கட்-ஆஃப் மதிப்பெண் காரணமாக பி.டி.எஸ். படிப்பில் சேர்ந்து விட்டு, அடுத்த கல்வி ஆண்டில் கட்-ஆஃப் மதிப்பெண் குறைவாக இருந்தால் அதிலிருந்து விலகி எம்.பி.பி.எஸ். படிப்பில் சேரும் மாணவர்களும் உண்டு.  இவ்வாறு எம்.பி.பி.எஸ். அல்லது பி.டி.எஸ். படிப்பில் ஒரு மாணவர் சேர்ந்த பிறகு, தொடர் கல்வி ஆண்டில் காலியிடம் ஏற்படுவதைத் தடுக்க அதிலிருந்து விலகுவோர் செலுத்த வேண்டிய அபராதத் தொகையை ரூ.5 லட்சமாக மருத்துவக் கல்வி தேர்வுக் குழு உயர்த்தியுள்ளது. 

                 சில ஆண்டுகளுக்கு முன்பு எம்.பி.பி.எஸ். படிப்பில் இடம் கிடைக்காத பழைய பிளஸ் 2 மாணவர்களில் 12 பேர், கடந்த ஆண்டு பி.டி.எஸ். படிப்பிலிருந்து விலகி எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர்ந்தனர். இவர்கள் அனைவரும் கடந்த ஆண்டு அபராதத் தொகையாக தலா ரூ.2 லட்சத்தை மருத்துவக் கல்வி தேர்வுக் குழுவிடம் செலுத்தியது குறிப்பிடத்தக்கது.  

செப்டம்பர் 30-ம் தேதிக்குள்... 

             இந்திய மருத்துவக் கவுன்சிலின் விதிகளின்படி தமிழகம் உள்பட நாடு முழுவதும் உள்ள அனைத்து மருத்துவக் கல்லூரிகளும் செப்டம்பர் 30-ம் தேதிக்குள் மாணவர் சேர்க்கையை முடிக்க வேண்டும். நடப்புக் கல்வி ஆண்டில் (2011-12) எம்.பி.பி.எஸ். அல்லது பி.டி.எஸ். படிப்பில் சேரும் மாணவர்கள் செப்டம்பர் 25-ம் தேதி முதல் செப்டம்பர் 30-ம் தேதிக்குள் படிப்பிலிருந்து விலகினால் அபராதமாக ரூ.50,000 செலுத்த வேண்டும்; நடப்புக் கல்வி ஆண்டில் செப்டம்பர் 30-ம் தேதிக்குப் பிறகு விலகினாலோ அல்லது அடுத்த கல்வி ஆண்டுகளில் எம்.பி.பி.எஸ். அல்லது பி.டி.எஸ். படிப்பிலிருந்து விலகினாலோ அபராதத் தொகையாக ரூ.5 லட்சம் செலுத்த வேண்டும்.  

எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். விண்ணப்பம்-நிபந்தனைகள்: 

             எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர விண்ணப்பிக்கும் மாணவர்கள், விண்ணப்பத்துடன் 8-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படித்த பள்ளி ஆதாரச் சான்றிதழ் பிரதி, பிளஸ் 2 இறுதித் தேர்வு "ஹால் டிக்கெட்' ஆகியவற்றை இணைக்க வேண்டும் என இந்த ஆண்டு புதிதாக நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. குடும்பத்தில் முதல் பட்டதாரி தகுதியை (கல்விக் கட்டணம் ரூ.4,000 விலக்கு பெற.) கோரும் மாணவர்கள், அதற்கு உரிய தலைமையக தாசில்தார் சான்றிதழை இணைப்பது அவசியம்.  எம்.பி.பி.எஸ். படிப்பில் விண்ணப்பிக்கும் மாணவர் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பதை உறுதி செய்து கொள்ளவே 8-ம் வகுப்பு வரை 12-ம் வகுப்பு வரை படித்த பள்ளி ஆதாரச் சான்றிதழை இணைக்குமாறு கூறப்பட்டுள்ளது.

Read more...

இன்று முதல் ஆசிரியர் பயிற்சியில் சேர விண்ணப்பம்

           2011-2012-ம் கல்வி ஆண்டில் அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள், அரசு உதவி பெறும் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள், தனியார் நிறுவனங்களில் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் ஆகியவற்றில் சேருவதற்கான விண்ணப்ப படிவங்கள் இன்று (புதன்கிழமை) முதல் வழங்கப்படுகின்றன.

           விண்ணப்ப படிவங்களை அனைத்து மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களிலும் (டயட்), அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களிலும் அலுவலக நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை பெற்றுக்கொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்திற்கு ஜுன் மாதம் 3-ந்தேதி மாலை 5 மணிக்குள் அனுப்ப வேண்டும் என்று ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்குனர் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

Read more...

திருச்சியில் புதிய ஐஐஎம்: ஜூன் 15ல் திறப்பு

          திருச்சியில் புதிய இந்திய மேலாண்மை நிறுவனம் (ஐஐஎம்) 60 மாணவர்களுடன் அடுத்த மாதம் திறக்கப்பட உள்ளது.

          புதிய ஐஐஎம்முக்காக 12 பேராசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். 27 மாணவர்களும் ஏற்கனவே தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என திருச்சி ஐஐஎம் இயக்குநர் டாக்டர் பிரபுல்லா அக்னிஹோத்ரி தெரிவித்தார்.

           முதல் பிரிவில் 60 மாணவ, மாணவியர்களுடன் ஜூன் 15 ம் தேதி ஐஐஎம் திறக்கப்பட உள்ளது. 20 பேராசிரியர்களுக்கு நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. எனவே மேலும் 4 அல்லது 5 பேரைத் தேர்வு செய்ய திட்டமிட்டுள்ளோம் என அக்னிஹோத்ரி தெரிவித்தார்.

Read more...

Google Indic Transliterate

  © Blogger templates ProBlogger Template by Ourblogtemplates.com 2008 | The Blog Full of Games

Back to TOP